இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து கவனித்திருக்கிறார்.
‘நீரின்றி அமையாது உலகு’ எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14ம் தேதி என்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் அன்புச்செழியன், இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் அன்புச்செழியன் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினரும், வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் பெற்றுக் கொண்டனர்.
இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், ”இந்த படத்திற்கு என்னை நம்பி வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி. படத்தின் இயக்குநரும் அவருடைய முதல் படத்தில் என் மீது நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என நினைக்கிறேன். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஐந்து பாடல்கள்.. ஐந்தும் ஐந்து வெரைட்டியாக இருக்கும். ஒரு பாடலை யுவன் சார் பாடியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜீ. வி.பி சாரும் சைந்தவி மேடமும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு சிங்கிள் ஷாட் இடம் பெறுகிறது. அந்த காட்சிக்கு பின்னணி இசை அமைப்பது கடும் சவாலாக இருந்தது. இந்த காட்சிக்காக இயக்குநரும் நானும் இணைந்து மூன்று நாட்கள் உழைத்தோம். மிகச் சிறப்பாக அந்தக் காட்சி அமைந்திருக்கிறது. இந்தக் காட்சி பேசப்படும் என நம்புகிறேன். அனைவரும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.