ஊர் பெரியவரான ரவி அவருடைய மகன் கண்ணன் ஆகியோர் மீது கொலைக் குற்ற புகார் வருகிறது. அதன் மூலம் தன் பழைய பகையைத் தீர்த்துக்கொள்ள போலீஸ் எஸ்.பி. அருணகிரி , அவர்களை என்கவுன்ட்டர் செய்ய திட்டம் தீட்டுகிறார். இதையறியும் ரவி தரப்பு, அருணகிரியைக் கொல்ல முயற்சிக்கிறது. இதற்காக காளியின் உதவியை நாடுகிறார் ரவி. இதில் களமிறங்கும் காளியை வைத்து, எஸ்.பி.அருணகிரி வேறு திட்டம் போடுகிறார். மாறி மாறி நடக்கும் இந்த சடுகுடு ஆட்டத்தில் என்கவுன்ட்டர் நடந்ததா, அருணகிரி என்ன ஆனார், விக்ரம் யார் பக்கம் நின்றார் என்பதுதான் படத்தின் கதை.
காளியாக விகரம் கடப்பாரை போனற உடற்கட்டுடன் வந்து மலையாக நிற்கிறார். படம் தொடங்கி காவல் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவின் ஆப்ரேஷன் ஆரம்பித்த பிறகும் படத்தின் நாயகன் எப்போது வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஆடியன்ஸுக்கு ஏற்படுத்தி அவர்களை இருக்கை நுனிக்கு நகர்த்தியிருக்கும் திரைக்கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சு.அருண்குமார்.
அப்படியே காளியாக வந்து அதிரடி ஆட்டம் போடும் விக்ரம் படத்தை தூக்கி சுமந்திருக்கிறார். மனைவி துஷாரா விஜயனை கொஞ்சுவதாக்கட்டும் , குடும்பம் குழந்தைகள் என்று வாழும் முன்னாள் கூலி படை ஆளின் அனைத்து மன உணர்வுகளையும் பிரதிபலித்திருக்கிறார். கொஞ்சமும் பயமில்லாமல் வெடிமருந்துகளை கையாளும் காடியில் நமக்கு அல்லு விட்டுபோகிறது. தன்னை நம்ப வைத்து கழுத்தறுக்கும் முதலாளியின் ஆட்களை சம்ஹாரம் செய்யும் போதும் ஸ்டேஷனிலே புகுந்து அருகம்புல் நடுவே துப்பாக்கியை வைத்து டேபிளில் ஏறி நிற்கும் அந்த காட்சி விக்ரம் ஆக்ரோஷத்திற்கு ஒரு சோறு பதம்.
துஷாரா இன்னொரு கட்டத்திற்கு சென்றிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா சொல்ல வேண்டாம் அடித்து தூள் செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுவே குடும்ப செண்டிமெண்டை வைத்து பதட்டத்தையும் பரபரப்பையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதுவும் வில்லனின் மகனாக வரும் சுராஜ் வெஞ்சார மூடு பார்வையாலே பயம் கொள்ள வைக்கிறார். கதையுன் தன்மைக்கேற்ப பாத்திரங்கள் தேர்வும் அவர்களின் நடிப்பும் படத்திற்கு பலமாக இருக்கிறது.
ஜிவி.பிரகாஷின் இசையும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் இரவு காட்சிகளையும் அழகாக காட்டியிருக்கிறது. ரசிக்க வைக்கிறது.
படம் தொடங்கியதிலிருந்து க்ளைமேக்ஸ் காட்சி வரைக்கும் பதட்டத்தை வைத்திருக்கிறது படம்.
வீர தீர சூரன் – அதிரடி ஆக்ஷன் திருவிழா
வீர தீர சூரன் – விமர்சனம்