கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ள, இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’சாரி’ திரைப்படத்தில் சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்திரல் நடைபெற்றது. இந்தப் படத்தை ரவிசங்கர் வர்மா, RGV – AARVI புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் தயாரித்துள்ளார். ’சாரி’ திரைப்படம் இந்த மாதம் 4 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் படம் பற்றி கூறியதாவது, “‘சாரி’ படத்திற்காக திறமையான புதிய குழு பணியாற்றியுள்ளது. ராம் கோபால் வர்மா எனக்கு படம் எப்படி உருவாக்குவது என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை. இது இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான தீவிர கதைக்களத்தைக் கொண்டது. சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யா மற்றும் ஆராத்யாவின் கதாபாத்திரம் வழக்கமான படத்தில் வருவது போல இருக்காது. ஆர்ஜிவியுடன் பணிபுரிவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
இசையமைப்பாளர் சஷிப்ரீதம் கூறியதாவது, “’குலாபி’ படத்திலிருந்தே ராம் கோபால் வர்மாவுடன் எனக்கு நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கிறது. ’சாரி’ படத்திற்காக அவருடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராம் கோபால் வர்மாவை அடிக்கடி சந்தித்து பேசுவேன். எனது அனைத்து பாடல்களையும் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் என்னை எப்போது அழைத்தாலும் படத்திற்கு இசையமைக்கத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்கள் நிச்சயம் பார்வையாளர்களை ஈர்க்கும்” என்றார்.
இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியதாவது, “சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ’சாரி’. இந்தப் படத்திற்கான கதையை நான் எழுதியுள்ளேன். நான் எழுதிய ஸ்கிரிப்டை விட இயக்குநர் கிரி கிருஷ்ணா இந்தப் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். இந்தப் படம் பற்றி நான் அவருடன் விவாதித்தபோது, அவர் சொல்லிய கருத்துகளும் எனக்குப் பிடித்திருந்ததால் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கினேன். ஒளிப்பதிவாளர் சபரி, இசையமைப்பாளர் சஷிப்ரீதம் மற்றும் எனது முழு அணியினரும் படத்தில் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சபரி தனது காட்சியமைப்புகள் மூலம் படத்தின் மையக்கருவை சரியாக பிரதிபலித்துள்ளார். இசையமைப்பாளர் சஷிப்ரீதமும் இந்தப் படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். சுபாஷ் படத்தில் மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். படக்குழுவினரின் பங்களிப்பு என்னை விட அதிகம் என்பது எனக்கு பெருமையான ஒன்று” என்றார்.