சத்யசீலன் என்கிற சத்யா திருமணத்திற்கு தன் அக்கா ஆனந்தி பார்த்த பெண் மோனிஷாவை பார்க்க செல்லும் போது நடைபெறும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்துக்குப் பின் அவரை நேரில் சந்திக்கிறார். இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கும்போது, அதிர்ச்சியூட்டும் விதமாக, அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் ஒரே பள்ளியில் சீனியர் மற்றும் ஜூனியராகப் படித்தவர்கள் என்பதை கண்டறிகிறார்கள். இந்தப் பள்ளிக் காலத்தில் இருவருக்கும் வேறு வேறு நபர்கள் மீது கிரஷ் இருந்திருக்கிறது. இருவரும் தங்களது பள்ளி பருவத்தில் நடந்த ஒருதலை காதலை பகிர்ந்து கொள்கிறார்கள். தாங்கள் பகிர்ந்துகொண்ட நினைவுகள், மறக்கப்பட்ட ஈர்ப்புகள் மற்றும் மனதில் நீடித்திருக்கும் உணர்வுகளைப் பற்றி அவர்கள் நினைவுகூரும்போது, அவர்களுக்கிடையேயான பிணைப்பு ஆழமாகிறது. இருவரும் தற்போதைய வாழ்க்கையில் இணைய முடிவெடுக்கும் முன், தங்களின் பழைய பள்ளி பருவ ஒருதலை காதல்களுக்கு ஒரு தீர்க்கப்படாத உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்கிறார்கள். எனவே மோனிஷாவின் யோசனைப்படி இருவரும் பள்ளிப்பருவ காதலர்களை நேரில் சந்தித்து அவர்கள் அவரவர் மனதில் இருக்கும் அந்த நினைவுகளை அவர்களிடம் தெரிவித்து அதற்கு ஒரு தீர்வு காண முடிவு செய்து இருவரும் இந்த உணர்ச்சிப் பயணத்தை தொடங்குகிறார்கள். அந்தப் பயணத்தில் இருவரும் தங்கள் பள்ளி பருவ காதலர்களை சந்தித்தார்களா? அவர்கள் இப்பொழுது எங்கே, எப்படி இருக்கிறார்கள்? இந்த உணர்ச்சிப் பயணத்தின் போது சத்யா மற்றும் மோனிஷா இருவருக்குள் காதல் மலர்ந்ததா? போன்ற கேள்விகளுக்கு நம் அனைவருடைய பள்ளிப்பருவ நினைவுகளை திரும்ப ஒரு கணம் ஞாபகப்படுத்தும் வகையில் பதில் அளித்து, ஒரு சுவாரஸ்யமான கிளைமாக்ஸ் உடன் சொல்கிறது வித் லவ்.
அறிமுக நாயகன் அபிஷன் ஜீவிந்த் ஒரு யதார்த்தமான, பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றத்தில் சத்யசீலனாக சத்யா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு சத்யாவாக மிகவும் இயல்பாக ஒரு நிதானமான நடிப்பை வழங்குகிறார். எமோஷனல் காட்சிகளில் ஆழமான உணர்வுகளைக் தனக்கே உரித்தான உடல் மொழி மற்றும் கண்கள் மூலம் கடத்துகிறார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் ஒரு இயக்குனராக அறிமுகமாகி பெரும் வெற்றி பெற்று ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருவது போல் வித் லவ் படத்தின் மூலம் ஒரு கதாநாயகனாக அறிமுகமாகி ஒரு நடிகராகவும் பெரும் வெற்றி பெற்று, இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நாயகனாக வலம் வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.
மோனிஷா கதாபாத்திரத்தில் அனஸ்வரா ராஜன் முதிர்ச்சியான நடிப்பு மற்றும் துள்ளலான பள்ளிப்பருவ காட்சிகள் என இரண்டிலும் முத்திரை பதித்து படத்துக்கு பெரிய பலமாக திகழ்கிறார். அவரது உடல் மொழி, மலையாளம் கலந்த வசன உச்சரிப்பு, உணர்ச்சிகரமான நடிப்பு அசைவுகளுக்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கிறது.
அனிஷா கதாபாத்திரத்தில் காவ்யா அனில் மற்றும் தினேஷ் கதாபாத்திரத்தில் ஹரிஷ் குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் கதையின் ஓட்டத்திற்கு உதவுகிறார்கள்.
தேனி முருகன், சரவணன், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, ஆனந்தி, டிம்பிள் கண்ணா, சித்தார் உட்பட அனைத்து நடிகர்கள் ஒவ்வொருவரும் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறார்கள். குறிப்பாக நண்பர்களாக வருபவர்கள் செயற்கைத்தனம் இல்லாமல், நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் மனிதர்களைப் போலவே திரையில் தோன்றுகிறார்கள்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை மற்றும் பின்னணி இசையும் படத்தின் உணர்வை நேர்த்தியாகக் கடத்துகிறது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு காட்சிகளுக்கு இதமான உணர்வைத் தருகிறது.
எடிட்டர் கோகுல் சந்திரன் படத்தொகுப்பு விறுவிறுப்பாக இருக்கிறது.
நிறைவேறாத பள்ளிப்பருவ காதல் நினைவுகளுக்கு ஒரு தீர்வு காண இரண்டு உயர்நிலைப் பள்ளி நண்பர்கள் தங்களுடைய பழைய காதலர்களைத் தேடி செல்லும் ஒரு பயணத்தில் இருவருக்குள் மலரும் காதலையும், பள்ளிப் பருவ நினைவுகளையும் ஒரு லேசான, எளிமையான மற்றும் உணர்வுப்பூர்வமான தொடுதலுடன்; சித்தரித்து, இளைஞர் கலாச்சாரம், காதல், மற்றும் எளிய உணர்ச்சிகளில் கவனம் செலுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் அறிமுக இயக்குனர் மதன்.
வித் லவ் – காதலர் உலகம் புதிது
வித் லவ் – விமர்சனம்