ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது.
பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வினில்
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது..,
இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இயக்குநர் ஆகாஷ் இந்தக் கதையை 2018-ஆம் ஆண்டிலேயே என்னிடம் கூறினார். அப்போது அவர் ஒரு இளம் படைப்பாளிக்கான கனவுகளோடு இருந்தார். பொதுவாக சினிமா வட்டாரத்தில், “பணம் இருப்பவர்களால் மட்டுமே படம் எடுக்க முடியும்; அம்பானி போன்றவர்களுக்குத்தான் அது சாத்தியம்” என்று பேசுவோம். ஆனால் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது பணம் மட்டுமல்ல. ஏராளமான தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு திட்டத்தை முழுமையாக உருவாக்குவது மிகப் பெரிய சவாலான வேலை.
அந்தப் பயணத்திற்காக ஆகாஷ் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு ஆண்டும் என்னைச் சந்தித்து, “ஸ்கிரிப்ட்டில் இதைச் சேர்த்திருக்கிறோம், அதை மேம்படுத்தியிருக்கிறோம்” என்று உற்சாகமாகப் பகிர்ந்து கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பு நிலைக்கு வந்து, இன்று அவரது மிகப்பெரிய கனவு நனவாகியுள்ளது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அதர்வாவை மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு ஒரு தனித்துவமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது; அதை இங்கே நேரில் பார்க்க முடிகிறது. ப்ரீத்தி, கயாது உள்ளிட்ட அனைத்து நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் வண்ணமயமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.
கார்த்திக், தமன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். நானும் தமனும் எங்கள் முதல் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மொத்தப் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் காட்சியமைப்பு, இசை மட்டுமல்லாமல், ஆழமான உணர்வுகளையும் கொண்ட ஒரு திரைப்படம். அதற்கு மேல் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை. திரையரங்குகளில் சந்திப்போம். நன்றி.