KollywoodNow

Tamil CInema Updates

ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையாக இருந்தது – யாஷ்

யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக நடைபெற்ற இந்த விழா, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தது. யாஷின் பிரம்மாண்டமான திரை ஆளுமை, கீது மோகன்தாஸின் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்தது.

நடிகர் யாஷ் பேசியதாவது ..,
தமிழ் மக்களே, நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘KGF’ படத்தில் நடித்தபோது எனக்கு நீங்கள் அளித்த அன்பு அளப்பரியது. அப்போது என்னை அன்புடன் வரவேற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. ஆனால் அப்போதும் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. விஜய் சாருக்கு நீங்கள் காட்டும் அன்பும் அப்படித்தான்.

நீங்கள் சினிமாவை மிகவும் நல்ல முறையில் அணுகுகிறீர்கள். ‘டாக்ஸிக்’ என்பது ஆர்வம் மற்றும் உணர்வுகளைப் பற்றிய திரைப்படம். இது முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம். இந்தப் படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.

சினிமா என்பது கன்னடம், தமிழ் அல்லது தெலுங்கு என்று மட்டும் பிரிந்தது அல்ல. அது இந்திய சினிமா. அந்த வகையில் இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவம் தரும் அனைவருக்கும் நன்றி.
இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுற்றி உருவாகியுள்ள உறவுகள் மற்றும் மோதல்கள், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வழக்கமான கேங்ஸ்டர் படங்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கதை சொல்லல் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கென ஒரு இருண்ட, அடர்த்தியான மற்றும் பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான கலை இயக்கம், கண்களைக் கவரும் ஒளிப்பதிவு மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் என, திரைப்படம் மிகப்பெரிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியிருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *