இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”.
இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது…
இயக்குநர் ஜோஷ்வா யுகபாரதி அண்ணன் மூலமாகத்தான் பழக்கம், அவர் முதலில் இந்தக் கதையைச் சொன்ன போது இந்த படத்தின் பெயரே வேறு, ஆனால் அதைவிட ஜென்டில்வுமன் டைட்டில் மிக பொருத்தமாக உள்ளது. ஜென்டில்மேன் பற்றி மட்டும் பேசும் உலகில், ஜென்டில்வுமன் பற்றியும் பேச வேண்டும் அதை ஜோஷ்வா செய்துள்ளான். சென்சாரில் இருந்து ஒரு நாள் போன் செய்தான், இத்தனை கட் என்ன செய்வது என்றான், சென்சாரால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் தான், அதனால் இதையெல்லாம் செய் என சொல்லித் தந்தேன். இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இங்கு எல்லாவற்றையும் புனிதப்படுத்துவது தான் மிகப்பெரிய பிரச்சனை, புனிதப்படுத்த நீ யார் ?. பலர் நம் காலத்துக்கு முன்பே வழக்கத்தை உடைத்து, என்னென்னவோ செய்து விட்டார்கள் ஆனால் நாம் அதைத் தாண்டவே இல்லை. இப்படியான உலகில் புனிதப்படுத்துவதைக் கட்டுடைப்பது முக்கியம். பெண்களை சக மனுஷியாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம் தான் மிக ஆபத்தான சமூகம் என நினைக்கிறேன். பெண்களை சக மனுஷியாகப் பார்த்து, அவர்களோடு அவர்கள் மொழியில் பேசுவது தான் இந்த ஜென்டில்வுமன். இது போன்ற படத்தைத் தயாரித்து திரைக்குக் கொண்டு வரும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
பெண்களை கடவுளாகப் பார்க்கும் சமூகம் ஆபத்தானது