சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
இயக்குநர் சசீந்திரா கே. சங்கர் பேசியதாவது …
இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. திரைப்படத்தை, மனிதனை அரசியலை தூக்கிப் பிடிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. என் தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. என் கனவை புரிந்து நான் சொன்ன கதையை நம்பி இந்தப்படத்தை எடுக்க ஒரு தயாரிப்பாளர் முதலீடு செய்ய வேண்டுமெல்லவா, அது முக்கியம். ஒரு தயாரிப்பாளர் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. சினிமா தான் நம் இணைப்புக்கு ஊண்டுகோலாக இருக்கிறது. நான் மலையாளி ஆனால் என் பாட்டி தமிழ் தான். என் வேர் தமிழ் தான். மலையாளம் கன்னடம் தெலுங்கு எல்லாம் தமிழில் இருந்து வந்த மொழிகள் தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மொழி. இந்த படத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டோம் வாழ வையுங்கள். என்னை இயக்குநராக்கியது தமிழ் தான். நான் இங்கு தான் பல ஆண்டுகளாக வேலை பார்த்தேன். இந்த மொழி வாழ வைக்கும் என நம்பிக்கையில் தான் இருக்கிறேன். அகமொழி விழிகள் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.
இசை கச்சேரிகளில் பாடல் பாடும் ஒரு இளைஞன், தன் காதலிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, அதற்கெதிராக களமிறங்குகிறான். பார்வையில்லாத அவன் எதிரிகளை எப்படி பழி தீர்க்கிறான் என்பதை, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், பரபர திருப்பங்களுடன் சொல்லி, ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் அட்டகாசமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.