KollywoodNow

Tamil CInema Updates

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றது, இதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ள நிலையில், பழைய ‘பிளாக்பஸ்டர்’ படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ‘தளபதி’ விஜய்யின் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘சச்சின்’ 20-ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி உலகமெங்கும் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றதை
கொண்டாடும் விதமாக படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நன்றி தெரிவிக்க வந்த தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு அவர்கள் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு பேசியபோது,” ‘தளபதி’ விஜய்யிடம் எப்படி சச்சின் திரைப்படம் சென்றது என்பதை கூறினால் ஒரு நாள் போதாது. ‘தளபதி’ விஜய் திருப்பாச்சி, மதுர போன்ற அதிரடி திரைப்படங்களில் கவனம் செலுத்தும் பொழுது, ஒரு மாற்றத்திற்காக ‘தளபதி’ விஜய்யுடன் கலந்துரையாடும் போது இயக்குனர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் என்னிடம் குஷி போன்ற கதை ஒன்றை கூறினார்,நீங்கள் கேட்கிறீர்களா?என்று கேட்டேன். அதன் பிறகு இயக்குனர் ஜான் மகேந்திரன் ‘தளபதி’ விஜய்யிடம் கதை கூற ஏற்பாடு செய்தேன். ஒன்றறை மணி நேரத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய்யிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, ‘கதை மிகவும் பிடித்திருக்கிறது; கண்டிப்பாக பண்ணலாமென்று’ கூறினார்.

உலகமெங்கும் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட்டேன். திரைப்படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல வசூல் சாதனை செய்ததாக கூறினார்கள். 200 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது, இப்பொழுது விளம்பரப்படுத்துதலின் செலவு குறைந்திருப்பதாலும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை எளிதாக சென்றடைவதன் மூலம் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி, மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். ‘சச்சின்’ மறுவெளியீடு செய்த மறுநாள் என் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றேன். அப்படி ஒரு மக்கள் கூட்டத்தை நான் பார்த்ததில்லை. தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல், அவர்களை உயர்த்தி ஊக்குவிக்கும் நடிகர்களில் ‘தளபதி’ விஜய்யும் ஒருவர். ‘சச்சின்’ திரைப்படம் மீண்டும் வெற்றியடைய திரையரங்கு உரிமையாளர்களும் மிகப்பெரிய காரணம். மேலும் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, மிகப்பெரிய வெற்றியடைய செய்த ஊடக நண்பர்களுக்கு மிக்க நன்றி”, என தனது உரையை முடித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *