KollywoodNow

Tamil CInema Updates

மாமன் – விமர்சனம்

அக்காவின் மகன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் தாய்மாமன் சூரி. மாமனை விட்டு ஒரு நொடி கூட பிரியாத லட்டு பையன். இருவருக்கும் இடையேயான பாசப்போராட்டம் தான் படம்.
பாபா பாஸ்கர் – சுவாசிகா தம்பதி 10 ஆண்டுகளாக குழந்தையே இல்லாமல் கவலைப்படுகிறார்கள். இந்த நிலையில், அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறக்கிறது. அந்த ஆண் குழந்தையை தாய்மாமனான சூரி தான் பாசமாக வளர்க்கிறார். பெற்றோரை காட்டிலும் சூரி உடன் தான் அதிகம் அன்பு காட்டத் தொடங்குகிறான் அந்த சிறுவன். இந்த சூழலில் சூரிக்கும், ஐஸ்வர்யா லட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
திருமணத்துக்கு பின்னரும் தாய்மாமனை விட்டு பிரிய மறுக்கும் அந்த சிறுவனின் சுட்டித்தனத்தால் கணவனை நெருங்க முடியாமல் தவிக்கிறார் நாயகி ஜஸ்வர்யா லட்சுமி. இதனால் சூரிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே சண்டை வருகிறது. அக்கா மகனை பிரிய முடியாமல் தவிக்கிறார் சூரி. ஒரு கட்டத்தில் சூரி ஐஸ்வர்யா லட்சுமி இருவருக்குமிடையே கருத்து மோதல் வந்து பிரிந்து விடுகிறார்கள். இதனால் குடும்பத்தில் பிரிவு வந்து ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து நிற்கிறார்கள். இனிமேல் அக்கா மகனை பார்க்கவே கூடாது என்று ஐஸ் வர்யா லட்சுமி சத்தியம் வாங்கிக்கொண்டதோடு தனது மருத்துவ பணியை மதுரைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்று விடுகிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
சூரி கிராமத்து வாசனையுடன் மாமனாக வந்து பாசம் பொங்க நிற்கிறார். அக்கா மகனுக்காக செய்யும் சின்னச்சின்ன விஷயங்கள் ரசிக்க வைக்கிறது. மருமகனை பிரியமுடியாமல் கலங்கி அழும் இடத்தில் நடிப்பில் ஜெயித்திருக்கிறார். மருமகனை விட்டுக்கொடுக்க முடியாமல் மனைவியிடம் தவிக்கும் இடம், பாபா பாஸ்கரை நினைத்து குமுறும் காட்சிகள். பெண்களுக்கு பிடித்த இடம். அக்காவாக ஸவாசிகா வழக்கம்போல ஸ்கோர் செய்து விட்டார். என் புள்ளைய பைத்தியம் என்று சொன்னாளா என்று பார்க்கும் கண்களில் அனல் தகிக்கிறது.. ராஜ்கிரண், விஜி ஆகியோரின் கதை இன்றைய கணவன் மனைவி உறவுக்கு சாட்சிகள். கீதா கைலாசம் மகள்களிடம் போடும் உரிமை சண்டை அருமை. யாரும் செய்யக்கூட நினைக்காத காட்சியை எளிதாக எடுத்துகொள்ளும் இடம்தான் நெருடலாக இருந்தது. பல காட்சிகள் டிவி சீரியலக்ள் போல அமைந்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
ஹேசம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் மண்ணுக்கு கொஞ்சமும் பொருந்தாத இசையும் பாடலும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் இரைச்சல்தான். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் படமாக மாமன் அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *