டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.
வரும் 30ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ ஜின் -தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.
தயாரிப்பாளர் கேயார் பேசுகையில், ”ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு முக்கியம். ஒரு தலைப்பு வைத்தால் அந்தத் தலைப்பு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். தற்போது ஓ டி டியில் அனைத்து மொழியினரும் படத்தை பார்ப்பதால் அவர்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தை தலைப்பை வைக்க வேண்டியதிருக்கிறது. இதையெல்லாம் நன்றாக சிந்தித்து, இந்தப் படத்திற்கு இயக்குநர் டி ஆர் பாலா ‘ஜின்’ என்று பெயர் வைத்ததை பாராட்டுகிறேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பார்த்தேன். பார்த்தவுடன் அதன் தரம் புரிந்தது. ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் சூப்பராக இருந்தது. ஜின் என்பது புது கான்செப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ‘ஈ டி’ என்றொரு படம் வந்தது. அதை அடிப்படையாக வைத்து தான் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ உருவானது. அந்த வகையில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜின்’.
இப்படத்தின் ஆடியோ உரிமை, டிஜிட்டல் உரிமை என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது என கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெற்றியை பெற்றிருக்கிறது. எந்த அளவிற்கு வெற்றியை பெறுகிறது என்பதை 30ம் தேதி முதல் திரையரங்குகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா லோகேஷ் கனகராஜ், நெல்சன் போல் முன்னணி நட்சத்திர இயக்குநராக வருவார். அந்த அளவிற்கு திறமைசாலியாக இருக்கிறார். அது படத்தின் முன்னோட்டத்திலேயே தெரிந்து விட்டது,” என்றார்.