ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கார் விருது பெற்ற எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3-வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் நட்சத்திர ஹோட்டலில் நேற்றைய தினம் இந்தியா முழுவதிலும் வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அசுர ஹானம்.. என்ற வரிகளுடன் தொடங்கும் உணர்ச்சிபூர்வமான பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், இயக்குனர் ஏ எம் ஜோதி கிருஷ்ணா, இசையமைப்பாளர் கீரவாணி, நடிகை நிதி அகர்வால், தெலுங்கு நடிகர்கள், மற்றும் டோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் பேசுகையில், எங்களுடைய தயாரிப்பிலேயே மிகப்பிரமாண்டமான படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை முதன் முதலில் அறிவிக்கும் போதே பான் இந்தியா படம் என அறிவித்தோம். இப்படம் தொடங்கியவுடன் கொரோனோ பிரச்சனையால் ஷூட்டிங் தடைபட்டது. அதன் பிறகு பவர்ஸ்டார் பவன் கல்யாண் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை முதல்வராக தற்போது பதவிகித்து வருகிறார். அவர் இல்லாமல் இந்த படம் நிறைவடையாது என்பதால் அவருடைய தேதி எப்பொழுது கிடைக்கிறதோ அந்த நேரங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ளது. முதல் பாகம் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் 20% முடிந்துள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்த சில மாதங்களில் துவங்க இருக்கிறோம். படத்திற்கு மற்றொரு பெரிய பலமாக இருப்பது கீரவாணி யின் இசை மற்றும் பாடல்கள். குறிப்பாக இன்று வெளியாகி உள்ள இந்த பாடல் தியேட்டரில் ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் ஏற்படும் வகையில் இருக்கும். அதேபோல் தோட்டா தரணியின் கலை படத்திற்கு மற்றொரு பிரம்மாண்டத்தை தந்திருக்கிறது. எங்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹரி ஹர வீரமல்லு படம் ஒரு மணிமகுடமாக இருக்கும் என்றார்.
ஹரி ஹர வீரமல்லு படம் எங்களுக்கு ஒரு மணிமகுடம்: தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம்