KollywoodNow

Tamil CInema Updates

ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.

விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”இவ்விழாவிற்கு வருகை தருவதற்காக இயக்குநர் அருள் அஜித் எனக்கு விடுத்த அழைப்பு கவர்ந்ததால் இங்கு வருகை தந்தேன். அதுவும் இல்லாமல் கார்ப்பரேட் துறையில் 25 ஆண்டு காலம் பணியாற்றிய பிறகு, நான் தனியாக 2016ம் ஆண்டில் திரைப்பட வணிகத்தில் ஈடுபட்ட போது வாங்கிய முதல் திரைப்படமான ‘ஜீரோ’ படத்தின் நாயகி ஷிவதா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பதால் வருகை தருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். அவர் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். கம்பீரமான, ஸ்டைலிஷான போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். அவருக்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரை வாழ்த்த வேண்டும். நாங்களெல்லாம் காலை எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தொடங்கி விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதற்காகவே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம். நானும் இயக்குநர் கௌரவ் நாராயணனும் இணைந்து ‘சிகரம் தொடு’ எனும் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நான் ஏழு முப்பது மணிக்கு எல்லாம் சென்று விடுவேன். எட்டு மணிக்கு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பேன். இப்படி செய்தால் தான் குறைந்த நாட்களில் படத்தை திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியும். மலையாளத்தில் இப்படித்தான் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்துவார்கள்.

ஒரு படம் பரவலான மக்களை சென்றடைந்தாலே வெற்றி பெறும். அந்த வகையில் இந்த’ கயிலன்’ திரைப்படமும் வெளியாகி, மக்களை சென்றடைந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *