ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ”இந்த நான்கு மணி நேரத்தை நான் ஒரு அழகான தருணமாக கருதுகிறேன். படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று எண்ணிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே தயாரிப்பாளர்கள் கையாலோ அல்லது இயக்குநர் கையாலோ அல்லது நாயகன் கையாலோ விருது வாங்குவதுதான். இதனை சாதித்து காட்டிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் ‘நான் ஹீரோவாக போகிறேன்’ என்று பிரதீப் சொன்னார். உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் ‘டிராகன்’ என்ற ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை.
‘லவ் டுடே’ படத்தை விட ‘டிராகன்’ படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அதற்காகவும் காத்திருக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.