இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது பாராட்டப்பட்ட குறும்படமான “லிட்டில் விங்ஸ்” வழங்குகிறது.
தேசிய விருது பெற்ற “லிட்டில் விங்ஸ்”, திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு பார்வையாளர்களுக்காக வெளியிடப்படுகிறது. இதையொட்டி லிட்டில் விங்ஸ் குறும்படம் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குறும்பட குழு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் நவீன், நடிகை மணிமேகலை, நடிகர் ராம்ஜி, இயக்குநர் ராஜூமுருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழிவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ராஜூமுருகன் பேசும் போது, “எல்லோருக்கும் வணக்கம், நவீன் திரைப்படம் இந்த இடத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் ட்ரீம் வாரியர்ஸ் இணைந்திருப்பது, இயக்குநர் கூறியதை போலவே ஜோக்கர் படத்தின் போது ஏற்பட்ட உணர்வு தற்போதும் ஏற்படுகிறது. நவீனை என்னிடம் ேசர்த்துவிட்டது, பவா செல்லத்துரை சார். அவர் ஒருமுறை என்னை தொடர்புகொண்டு நவீன் என்றொரு பையன் இருக்கிறான். அவனை முக்கியமான இயக்குநரிடம் சேர்த்துவிட அதிக முயற்சித்தேன். அவன் உலகசினிமா பற்றி அதிகம் பேசியதால், ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும் என்று கூறி இயக்குநர் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் அவன் விரக்தியாக இருக்கிறான் என்றார். ரிஜெக்ட் ஆனவர்களை என்னிடம் தள்ளிவிடுகின்றீர்கள் என்று கூறி மறுத்துவிட்டேன். ஆனால், அவர் விடாமல் எங்கு செல்கிறாய் என்றார். நான் தருமபுரிக்கு படப்பிடிப்புக்கு செல்கிறேன் என்றேன். அவர் செல்லும் வழியில் திருவண்ணாமலையில் வந்து நவீனை லக்கேஜ் போல் எடுத்துச் செல்ல சொன்னார். செல்லும் வழியில் அழைத்து செல்லப்பட்டவர் தான் நவீன். அவருடன் பயணித்த சில வாரங்களில் அவர் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வருவார் என்பதை புரிந்து கொண்டேன். தொடர்ந்து நிறைய பயணம், வாசிப்பு செய்பவர் நவீன். நிறைய படங்கள் பார்ப்பது, நிறைய உழைப்பை கொடுப்பவர் நவீன். தற்போது மணி சாரிடம் இருக்கிறான். அவன் எழுதும் எல்லாவற்றையும் என்னிடம் காண்பிப்பான். இந்த கதையை என்னிடம் கொடுத்தான். இதை படித்ததும், இது 20 நிமிடங்களாக இருந்தாலும், இது பேசும் உளவியல் மிகவும் பெரியதாக இருக்கிறது. இது பசி, ஆண், பெண் உறவு, நம் கலாச்சாரம் பற்றி பேசுகிறது. இதையெல்லாம் பேசுகிறது, நிச்சயம் இதை எடு என்று கூறினேன். அப்போது திலானியுடன் இணைந்து தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காம்ரேட் டாக்கீஸில் நாங்கள் தொடர்ச்சியாக ஆவணப்படங்களை எடுத்து வருகிறோம். எங்கள் குழுவில் சிந்தன் தோழர் உள்பட பலர் பணியாற்றி வருகிறோம். சமீபத்தில் நாங்கள் எடுக்க வாச்சாத்தி ஆவணப்படம் அதிகம் பேசப்பட்டது. அந்த மாதிரி ஆவணப்படங்கள், குறும்படங்களை எடுத்து வருகிறோம். அதில் லிட்டில் விங்ஸ் எடுத்ததில் பெருமை அடைகிறோம். அதை பார்த்து ட்ரீம் வாரியர்ஸ் இதை வெளியிடுவதாக பிரகாஷ் சார் மற்றும் பிரபு சார் தெரிவித்தனர். ட்ரீம் வாரியர்ஸில் பிரகாஷ் சார் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர். அடிக்கடி நாங்கள் உரையாடும் போது, அவர் நிறைய கதைகளை படித்து இதை படமாக்கலாம் என்பார். நிறைய இலக்கியம் படிப்பவர் பிரகாஷ் சார். இந்த மாதிரியான தயாரிப்பாளர் அமைவது இந்திய சினிமாவில் மிகவும் அபூர்வம். தொடர்ச்சியாக இலக்கியம், வாழ்க்கைய சரியான பிணைப்பில் சினிமாவுக்கு கொண்டு வருவது பிரகாஷ் சார் மற்றும் பிரவு சாரிடம் இருக்கும் மிகமுக்கிய அம்சமாக பார்க்கிறேன். இந்தப் படத்தை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்ததும், நவீன் வாழ்க்கை தொடங்கும் என்று நினைத்தேன். ட்ரீம் வாரியர்ஸ் தொட்ட படைப்பாளிகள் அனைவரும் மிக முக்கிய இடத்திற்கு வந்துள்ளனர். அப்படிப்பட்ட விஷயத்தை தான் ட்ரீம் வாரியர்ஸ் தொடர்ந்து செய்வார்கள். ட்ரீம் வாரியர்ஸ்-க்கு மிக்க நன்றி. சந்தோஷ் இசை மிகவும் அற்புதம். சினிமாவில் உங்களுக்கு நிச்சயம் பெரிய இடம் உண்டு. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அற்புதமான நடிப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். பிலோமின், இவர் படைப்பை மட்டுமே பார்க்கிறார். இன்று இந்தியாவில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் ஒருவர் இந்த குறும்படத்தில் தனது கவனத்தை செலுத்தி, புதிய படைப்பாளிகளுக்கான இடமாக அவரது அலுவலகம் இருக்கிறது. அவரது அலுவலகம் ஃபேக்டரி போல் இயங்கி வருகிறது. எந்த அறையில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாது. நல்ல படைப்பாளிகளுக்கும், நடிகர்களுக்கும் எப்போதும் மேடையாக ட்ரீம் வாரியர்ஸ் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்,” என்றார்.