பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 27 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் பேசியதாவது, “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்து கட்டிக்காப்பவரைதான் அப்படி கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண் தனியாக வாழும்போது சந்திக்கின்ற சோதனையும் வேதனையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக இயக்குநர் சிவா இதில் பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிப் படத்தை தர காத்திருக்கும் சுதன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.