படத்தின் தலைப்பைப் போலவே ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பயணித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேற்பட்ட கால்ஷீட், நான்கு கட்டமாக நடந்த படப்பிடிப்பு, எண்ணற்ற நினைவுகள் என நீண்ட பயணத்திற்குப் பிறகு, படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குள் நுழைந்துள்ளது.
விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவின் எருமேலி பகுதியில் தொடங்கியது. கேரளாவின் பசுமையான பகுதிகள்,கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் மூன்று பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டதோடு, ஸ்பென்சர் பிளாசா, அண்ணா சாலை (மவுண்ட் ரோடு), ஆச்சி ஹவுஸ், பெருங்குடி மற்றும் அடையார் பாலம் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையின் ஈசிஆர் கோவளம் கடற்கரைப் பகுதியில் நிறைவடைந்தது.
இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூறுகையில், “‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்கள் அனைவருக்கும் திருப்திகரமான தருணமாகும். இந்தக் கதையை ஆரம்பம் முதலே நம்பி, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நம்பிக்கையால்தான் நாங்கள் நினைத்தபடியே இந்தப் படத்தை உருவாக்க முடிந்தது. ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘ஹைக்கூ’ திரைப்படம் ரசிகர்களுக்கு மனதை வருடும், இதமான, தென்றல் போல இலகுவான, உணர்ச்சிப்பூர்வமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது. அதை விரைவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒரு இயக்குநரின் கனவுகளை நனவாக்க தயாரிப்பாளரின் ஆதரவு மிக அவசியம். அந்த வகையில், சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்ட எனது தயாரிப்பாளர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். எதிர்காலத்தில் பல இளம் இயக்குநர்களுக்கு விஷன் சினிமா ஹவுஸ் வாய்ப்பளிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.