KollywoodNow

Tamil CInema Updates

பத்தா – விமர்சனம்

1986-ஆம் ஆண்டு வடசென்னையின் களத்தைப் பின்னணியாகக் கொண்டு விரிகிறது ‘பத்தா’ திரைப்படத்தின் கதை.
விஜய் சேதுபதி நடித்திருக்கும் பத்தா, அந்தப் பகுதியையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அசைக்க முடியாத உள்ளூர் ரவுடி. எதிரில் நிற்பவர்களை எல்லாம் அடித்து வீழ்த்தும் அளவுக்கு முரட்டுத்தனமும் ஆக்ரோஷமும் கொண்டவர். தன்னை எதிர்த்து நிற்க அந்த ஏரியாவில் யாருமே இல்லை என்ற ஆணவத்தில் வாழும் அவர், மனைவியிடமும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிகிறார். ஆனால், வெளியுலகிற்கு எவ்வளவு கொடூரமானவராகத் தெரிந்தாலும், தனது மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட தந்தையாக இருக்கிறார்.
இதற்கு முற்றிலும் மாறான உலகில் வாழ்கிறான் எட்டு வயது சிறுவன் சபரி (சாய் பிரித்விராஜ்). ஒருவரை பத்தா கொடூரமாகத் தாக்கும் காட்சியை நேரில் பார்க்கும் சபரி, பத்தாவை மனித உருவில் நடமாடும் மிருகமாகவே தனது மனதில் பதித்துக் கொள்கிறான்.
இப்படியாக, ஒருவரைப் பற்றி மற்றொருவர் முற்றிலும் மாறுபட்ட பார்வையைக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் பத்தாவும் சபரியும் எதிர்பாராத விதமாக சந்திக்கின்றனர். அந்தச் சந்திப்பு இருவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்குகிறது. அதன்பிறகு அவர்களது வாழ்க்கை எந்த திசையில் செல்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

“நம்மிடம் ஒரு பொருள் இருக்கும் வரை அதன் அருமையை நாம் உணர்வதில்லை; அது நம்மை விட்டுப் பிரியும்போதுதான் அதன் உண்மையான மதிப்பை உணர்கிறோம்” என்ற கருத்தை மையமாக வைத்தே இயக்குநர் பாலாஜி தரணிதரன் இப்படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார்.
ஒரு பயங்கரமான உள்ளூர் ரவுடியின் ஆயுதங்கள், அடியாட்கள், ஏரியாவில் அவருக்கு இருக்கும் அச்சுறுத்தலான பிம்பம், சுதந்திரம் என ஒவ்வொன்றாகப் பறிபோகும்போது, தான் இழந்தது என்ன என்பதை அவன் உணரும் கதைகளை தமிழ் சினிமாவில் நாம் ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், அதே கருவை இவ்வளவு வித்தியாசமான கோணத்தில் சொல்ல முடியுமா என வியக்க வைக்கிறது ‘பத்தா’. இதுவே இப்படத்தை தமிழ் சினிமாவில் தனித்துவமான, மனிதநேயத்தை முன்னிறுத்தும் படைப்பாக மாற்றுகிறது.
சமூகம் நம்மீது திணிக்கும் அடையாளங்களையும் முகமூடிகளையும் அகற்றிவிட்டால், அவற்றுக்குப் பின்னால் உண்மையில் இருப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. பிறருக்கு வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்தும் அந்த முகமூடியை நாம் ஏன் அணிந்துகொண்டோம் என்பதற்கான காரணத்தை, பல நேரங்களில் நாமே உணராமல் வாழ்க்கையை கடந்து செல்கிறோம்.
படத்தின் மிக முக்கியமான பலம் அதன் நிதானமான திரைக்கதை. பத்தாவுக்கும் சிறுவனுக்கும் இடையிலான உறவை இயக்குநர் பாலாஜி தரணிதரன் அவசரமாகவோ, செயற்கையாகவோ கட்டமைக்கவில்லை. நகைச்சுவை, நெகிழ்ச்சி, உணர்வுகளைத் தூண்டும் தருணங்கள் என அனைத்தையும் இயல்பான சம்பவங்களின் வழியே நகர்த்தி, இருவருக்குமான உறவை படிப்படியாக அழுத்தமாக உருவாக்குகிறார்.
சிறுவன் சாய் பிரித்விராஜ், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு இணையாகப் பயணித்திருக்கிறார். எந்த இடத்திலும் செயற்கையான அல்லது ‘கிரிஞ்ச்’ தனமான நடிப்பாக மாறிவிடாமல், ஆச்சரியம், அச்சம், குழப்பம் போன்ற உணர்வுகளை கண்களின் வழியே இயல்பாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, அவரது கண்களில் வெளிப்படும் அந்தக் குழந்தைத்தனமான உண்மைத்தன்மை நம்மை எளிதில் ஈர்க்கிறது.
லிஜோமோல் ஜோஸுக்கு படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். அதன் தன்மையை உணர்ந்து, தனது நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சாந்தி பாலச்சந்திரன், ஹரிகிருஷ்ணன், தீபா வெங்கட் ஆகியோருடன், விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் இரு இளைஞர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள்.
சாய் அபயங்கரின் பின்னணி இசையும், செல்வகுமாரின் ஒளிப்பதிவும் படத்தின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, ‘தங்கமே மகளே’ பாடலைத் தேர்வு செய்த விதமும், கதையின் முக்கியமான தருணத்துடன் அதை இணைத்திருக்கும் விதமும் கவனம் ஈர்க்கிறது.
சுற்றியிருப்பவர்களைக் கூட கவனிக்க நேரமின்றி, கையில் இருக்கும் மொபைல் போனுக்குள் மூழ்கி, எதையும் நிதானமாக யோசிக்காமல் உடனுக்குடன் முடிவெடுக்கும் அவசரமான வாழ்க்கைச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட காலகட்டத்தில், மனித உறவுகளின் மதிப்பையும், நாம் உண்மையில் இழந்து கொண்டிருப்பது என்ன என்பதையும் நிதானமாக சிந்திக்க வைக்கும் ‘பத்தா’ போன்ற திரைப்படங்கள் அவசியமானவையாகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *