பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட அசோக் செல்வன் –(ப்ரீத்தி முகுந்தன்) தம்பதி, திருமணத்துக்குப் பிறகு தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கப் போராடுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் இருவருக்கும், வேலைப்பளுவால் ஒருவருக்கொருவர் நேரம் செலவிடக்கூட முடியாத நிலை.
இயலின் நீண்ட நாள் கனவான ‘ஹோம் ஸ்டே’யை உருவாக்க வேண்டும் என்பதற்காக, தங்களது சேமிப்பை முதலீடு செய்து மலைப்பகுதியில் அமைந்துள்ள ராணி பத்மினியின் (ரேவதி) பூர்வீக வீட்டை வாங்குகின்றனர். ஆனால், அந்த நிலத்தின் மீது கண் வைத்திருக்கும் உள்ளூர் எம்.எல்.ஏ. கதிர் பாலு, தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தம்பதிக்கு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்குகிறார்.
அரசு அனுமதி பெறுவதிலிருந்து தொடங்கி, எம்.எல்.ஏ.வின் கமிஷன் வழக்கறிஞர் சாபுமோன் அப்துசமத், அவரது ஆதரவுடன் செயல்படும் இன்ஸ்பெக்டர் மகா டெல்லி கணேஷ் என அடுத்தடுத்து உருவாகும் தடைகள், அசோக்- ப்ரீத்தி கனவு வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றுகின்றன.
அமைதியான வாழ்க்கையைத் தேடி மலைப்பகுதிக்கு வந்த தம்பதியினர், இறுதியில் அதிகாரத்தையும் வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். ப்ரீத்தி கனவை காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் போராட்டம் ஆக்ஷன் நிறைந்த திரில்லராக மாறுகிறது
அசோக் செல்வன், குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் கணவனின் அன்பையும் தவிப்பையும் தனது இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். மனைவியின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் கணவனாகவும், இடைவேளைக்கு முன்பான வாக்குவாதக் காட்சியில் பொறுமையின் எல்லையைத் தொட்டபோதும் நிதானத்தை இழக்காமல் வெளிப்படுத்தும் தருணங்களிலும், கதாபாத்திரத்தின் உணர்ச்சிப் போராட்டங்களை இயல்பாகக் கடத்துகிறார்.
ஆனால், படத்தின் பிற்பகுதியில் ஒரு சாதாரண மனிதராக அறிமுகமாகும் கதாநாயகன், திடீரென எந்தவிதமான பின்னணியும் இல்லாமல் தனியொருவனாகப் பெரிய ரவுடிக் கூட்டத்தை எதிர்கொள்ளும் ‘ஒன் மேன் ஆர்மி’ பாணிக்கு மாறும்போது, அவரது மென்மையான உடல்மொழியும் தோற்றமும் அந்த அதிரடி உலகத்துடன் முழுமையாகப் பொருந்தவில்லை. இதனால் சில காட்சிகளில் செயற்கைத்தன்மை வெளிப்படுகிறது.
காதல் மற்றும் உணர்ச்சிக் காட்சிகளில் வெளிப்படுத்திய அதே நம்பகத்தன்மையை, அளவுக்கு மீறிய சண்டைக் காட்சிகளில் அவரால் முழுமையாகக் கொண்டு வர முடியவில்லை. லாஜிக் மீறல்கள் நிறைந்த அந்த ஆக்ஷன் பகுதிகளில் அவர் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் கதாநாயகனின் பாத்திரத்தை உருவாக்கிய விதத்தில் இருந்த தெளிவின்மை சில இடங்களில் வெளிப்படுகிறது.
பிரீத்தி முகுந்தன், தனது இயல்பான முகபாவனைகளாலும் வசீகரிக்கும் கண்களாலும் நாயகியின் காதல், கோபம், ஆதங்கம் உள்ளிட்ட உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, கணவருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளில் நிஜ வாழ்க்கைத் தம்பதியரின் இயல்பான மனநிலையை அழகாகப் பிரதிபலிக்கிறார்.
குறுகிய நேரமே தோன்றினாலும், முதிர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் ரேவதி. ஆனால், பல ஆண்டுகளாக வீட்டை விற்க மறுத்த அவரது கதாபாத்திரம், ஒரே ஒரு உருக்கமான பேச்சுக்குப் பிறகு உடனடியாக மனம் மாறி வீட்டை ஒப்படைத்துவிட்டு விலகுவது கதாபாத்திர வடிவமைப்பின் பலவீனமாகத் தெரிகிறது.
கதிர் பாலு, அரசியல் அதிகாரத்தின் ஆணவத்தைத் தனது கம்பீரமான பேச்சு மற்றும் மிரட்டலான உடல்மொழியால் வெளிப்படுத்துகிறார். குரல் வளம் வில்லத்தனத்திற்கு வலு சேர்த்தாலும், வழக்கமான வில்லன் பாணியிலிருந்து விலகாதது குறையாகிறது.
ஊழல் காவல் அதிகாரியாக வரும் மஹா டெல்லி கணேஷ், தனது அத்துமீறல்களால் வெறுப்பை ஏற்படுத்தினாலும், சில இடங்களில் மிகையான நடிப்பு கதையின் இயல்பைக் குறைக்கிறது. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தும் வழக்கறிஞராக வரும் சாபுமோன் அப்துசமத், அமைதியான வில்லத்தனமும் நக்கல் பேச்சும் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, காதலின் மென்மையையும் ஆக்ஷன் காட்சிகளின் பரபரப்பையும் சிறப்பாக பிரதிபலித்து திரைக்கதையின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கிறது.
கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு மலைப்பகுதியின் இயற்கை அழகையும், காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளின் வெவ்வேறு உணர்வுகளையும் நேர்த்தியாகப் பதிவு செய்து படத்திற்கு காட்சி ரீதியான சிறப்பைச் சேர்க்கிறது.
அன்பில் அவன் – விமர்சனம்