ட்ரோன்ஸ் – விமர்சனம்
படத்தின் நாயகன் டிராவிட் செல்வம், நாயகி அஞ்சலி நாயர்,நடிகர் தீபக் ஆகிய மூவரும் கல்லூரி மாணவர்கள்.அவர்கள் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.அதனால் பிளாக் ஹோல் எனப்படும் ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தில் தங்குகின்றனர். அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலை.அதேசமயம், ட்ரோன் மூலம் வெளியுலகத்தைப் பார்க்கிறார்கள்.அதன்விளைவாக நாயகி சித்தி இத்னானி மீது காதல் கொள்கிறார் டிராவிட்செல்வம்.இந்தக் காதலை நாயகியின் பாட்டி தேவதர்ஷினி எதிர்க்கிறார்.அவர் சூனியக்காரி.அதனால்,நாயகன் உள்ளிட்ட நண்பர்களை ஒரு மாயக்கோட்டைக்குள் அடைத்து வைக்கிறார்.
இதற்கிடையே நகரத்தில் மர்மக்கொலைகள் நடக்கின்றன.அதை ஒரு சைக்கோ செய்வதாகச் சொல்லப்படுகிறது.அதுகுறித்து துப்பறிகிறது காவல்துறை.சூனியக் கிழவியிடம் சிக்கிய நண்பர்கள், சைக்கோ கொலைகாரன் யார் ? நண்பர்களின் நிலை என்ன என்பதையும் காமெடி கலந்து விளக்குகிறார்கள்.
ட்ராவிட் செல்வம் இயக்குனரின் கதைக்கு ஆட்டம் போட்டு ஜாலு செய்து நடித்திருக்கிறார்.
தேவதை வேடத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானி, தோற்றத்திலும் நடிப்பிலும் அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். குறிப்பாக, நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
அஞ்சலி நாயர், தீபக் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது பாத்திரங்களை இயல்பாகக் கையாண்டிருக்கிறார்கள். தேவதர்ஷினி, சூனியக்கிழவியாகத் தோன்றி அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார். காவல்துறை ஆய்வாளராக வரும் சினிமாவாலா சதீஷ், தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தைச் சிறப்பாகச் செய்து வரவேற்பைப் பெறுகிறார். குரேஷி தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவனுக்குப் படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே அமைந்திருக்கின்றன. இருப்பினும், கிடைத்த வாய்ப்புக்குள் காட்சிகளை நிறைவாகப் படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர்., கற்பனையும் மாயாஜாலமும் நிறைந்த இந்தக் கதைக்கு பின்னணி இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, காட்சிகள் தொய்வின்றி நகரும் வகையில் படத்தைச் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.
கதையின் கற்பனை உலகத்தை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் பல புதுமையான பொருட்களை உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் ஆர். கிஷோர். அவரது கலை வடிவமைப்பு படத்துக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்க்கிறது.
பன் பட்டர் ஜாம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத், இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார். மோகினி, தேவதை, சூனியக்காரி எனப் பழங்காலக் கதைகளில் இடம்பெறும் கற்பனைப் பாத்திரங்களுடன், கருந்துளை போன்ற அறிவியல் நிகழ்வுகளையும் இன்றைய தொழில்நுட்ப உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ட்ரோனையும் இணைத்து வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார். கற்பனையும் அறிவியல் கூறுகளும் நகைச்சுவையும் கலந்த இந்த முயற்சியின் மூலம், குழந்தைகள் மட்டுமின்றி குடும்பத்தினரும் ரசிக்கக்கூடிய சுவாரசியமான படத்தை வழங்கியிருக்கிறார்.
ட்ரோன்ஸ் – விமர்சனம்