இளனும், சான்வி மேக்னாவும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சான்வி மேக்னா, மணக்கோலத்திலேயே மண்டபத்தில் இருந்து தலைதெறிக்க தன் வீட்டுக்கு ஓடிவிடுகிறார். என்ன, ஏது என்று புரியாமல் அனைவரும் அதிர்ச்சியடைய, தன் பெற்றோரை பிரிய மனம் இல்லாதது தான் காரணம் என்று தெரிய வருகிறது. கணவர் இளன் மற்றும் பெற்றோர் அறிவுரை சொல்லியும் கேட்காத சான்வி மேக்னா, திருமணத்திற்குப் பிறகு பெண் எதற்காக கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டும், கணவர் மனைவி வீட்டுக்கு வரலாமே..!, என்று பெண்ணியம் பேசுகிறார்.
ஆரம்பத்தில் சான்வியின் எதிர்பார்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளன், பிறகு மனைவியின் விருப்பத்தை ஏற்று, அவரது வீட்டில் வாழ செல்கிறார். வேலை இல்லாமல், மனைவி சம்பாத்தியத்தில், மாமியார் வீட்டில் வசிக்கும் இளனின் திருமண வாழ்க்கை ‘பியார் பிரேமா காதல்’ போல் இனித்ததா?, இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.
இளன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அறிமுக நடிகர் இளன், திரையில் துள்ளித்திரியும் சுட்டித்தனத்தையும் இளமைத் துள்ளலையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். காதல் உரையாடல்களிலும், நகைச்சுவைக் காட்சிகளிலும் தனது கள்ளமற்ற பாவங்கள் மூலமாக ரசிகர்களை எளிதாகக் கவர்ந்து நல்ல அழுத்தத்தைப் பதிக்கிறார்; அதேநேரம், தீவிரமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய கனமான தருணங்களிலும், கோபத்தை வெளிப்படுத்தும் உச்சிமுனை அழுத்தங்களிலும் அனுபவமின்மை வெளிப்படுவதால், ஆழமான பரிமாணங்களில் அவரது நடிப்பு சற்றே போதாமையாக அமைந்து எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பவித்ராவாக வலம் வரும் சான்வி மேக்னா, நவீன சிந்தனை கொண்ட சுதந்திரப் பெண்ணின் மிடுக்கையும் கம்பீரத்தையும் தத்ரூபமாகத் தாங்கிப் பிடித்து படத்திற்குப் பெரும் தூணாக நிற்கிறார். தனது சுடர்விடும் பார்வைகளாலும், நிமிர்ந்த நடை உடை பாவனைகளாலும் கதாபாத்திரத்தின் சுயமரியாதையை நேர்த்தியாகப் பிரதிபலித்துப் பாராட்டுக்களை அள்ளுகிறார்;
அம்மாவாக நடிக்கும் ராதிகா, முதன்மை கதாபாத்திரங்களுக்கு இணையாக இயல்பான நடிப்பால் ஈடுகொடுக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் போன்றோரின் பாத்திரங்கள் அறிவுரை கூறவும் கதையை முன்னெடுக்கவும் உதவுகின்றன. யோகி பாபுவின் சில காட்சிகள் சிரிக்க வைக்கின்றன; மாறனின் நகைச்சுவை அவ்வளவாகப் பலன் தரவில்லை.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கே.பாபுவின் பணி வண்ணமயமாகவும் ரசனையுடனும் அமைந்திருக்கிறது. நட்சத்திரங்களை அழகாகப் படம்பிடித்திருப்பதோடு, மொட்டை மாடி மற்றும் நாயகியின் வீட்டை மையமாக வைத்து பெரும்பாலான காட்சிகளை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மனதில் ஆழமாகப் பதியவில்லை; ஆனால் பின்னணி இசை அளவுடன் பயணித்து காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், காதலோடு செல்லும் முதல் பாதியை ரசமாகத் தொகுத்திருந்தாலும், திருமண வாழ்க்கையை விவரிக்கும் இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வு உணரப்படுகிறது.
திருமண வழக்கத்தை மாற்றும் நிவேதிதா போஹங்கர் கதையின் சுவாரஸ்யம் திரைக்கதையில் முழுமையாக வெளிப்படவில்லை. மனைவி வீட்டில் கணவர் தங்குவதும், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை ஆண்கள் எதிர்கொள்வதுபோல் அமைக்கப்பட்ட காட்சிகளும் படத்திற்கு உதவவில்லை; மாறாக சில இடங்களில் பார்வையாளர்களை எரிச்சலடையச் செய்கின்றன. கூடுதல் திரைக்கதை எழுதி இயக்கிய இளன், காதலைத் திறமையாகக் கையாண்டதுபோல் திருமண வாழ்க்கை மற்றும் அதன் சிக்கல்களைச் சரியான முறையில் கையாளத் தவறியிருக்கிறார். முதல் பாதியில் காதல் காட்சிகளும் சமூக ஊடகங்களில் ஒரு விஷயம் எப்படிப் பரவுகிறது என்பதும் ரசிக்க வைக்கிறது.
பியார் பிரேமா கலயாணம் – கைதட்டல்
பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்